ஸ்ரீ ஸத்யநாதாய க்ருஷ்ணய பரப்ரஹ்மணே நம:
கார்த்தீக புராணம் முதல் அத்யாயம்1:-
KARTHIKA PURANAM TAMIL PDF CHAPTER 1/ DAY 1
KARTHIKA PURANAM TAMIL CHAPTER 1 |
ஒரு நாள் திரிலோக சஞ்சாரியான நாரதமுனிவர் சுவர்க்க லோகத்திலுள்ள பாரிஜாத மலரை எடுத்துக்கொண்டு துவாரகாபுரியை அடைந்து கிருஷ்ண பரமாத்மாவிடம் அம்மலரைச் சமர்ப்பிக்க, அதைக் கண்ணன் ருக்மணி தேவியிடம் கொடுத்ததை அறிந்த சத்யபாமை மனம் சகிக்காதவளாகி ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிடம் பாரிஜாத மலரைப் புஷ் பிக்கின்ற கற்பக -விருக்ஷமே தனது உத்யானவனத்தில் இருக்கவேண்டும் என்று கேட்டு அதன்படியே பகவான் அனுக்ரஹிக்க மிகவும் சந்தோஷம் அடைந்த சத்யபாமை தனது நாயகரான கிருஷ்ணமூர்த்தியை நோக்கிச் சொல்லுகிறாள்.
27 நட்சத்திர ஸ்லோகங்கள் தமிழில் காண
ஹே , கிருஷ்ணு நான் பூர்வ ஜன்மத்தில் செய்த புண்ய விசேஷத்தினால் புருஷோத்தமரான தங்களையே நாயகனாக அடைந்தேன். என் மாதா பிதாக்களும் என்னைப் பெற்ற பாக்கிய விசேஷத்தினால் மூன்று உலகங்களிலும் கீர்த்தி பெற்றார்கள் . பதினாறாயிரம் கோபிகா ஸ்த்ரீகளில் நானே உயர்ந்தவளாகவும் இருக்கிறேன். உலகில் பிறந்த மாந்தர்கள் கற்பகவிருக்ஷத்தைக் கனவில்கூட பார்த்து அறிய மாட்டார்கள் . அப்பேர்ப்பட்ட மஹிமை பொருந்திய கற்பகவிருக்ஷம் எனது இல்லத்திலேயே இருக்கின்றது . சுவர்க்க , மத்ய , பாதாளம் என்கிற மூன்று உலகங்களுக்கும் நாயகராகவும் , சாக்ஷாத் ஜகன்மாதாவான ஸ்ரீலக்ஷ்மீ தேவிக்குப் பதியான ஸ்ரீமத் நாராயண மூர்த்தியாகிய தங்களுக்கு மிகவும் பிரியமானவளாக இருக்கிறேன் . உலகத்திலே யாருக்கும் கிட்டாத வைபவமும் , பெருமையும் , போக பாக்கியங்களும் பெற்றிருக்கும் எனக்குத் தங்களிடம் ஒன்றைக் கேட்கவேண்டுமென்ற விருப்பம் உண்டாகிறது.
அதாவது , நான் இப்பேர்ப்பட்ட சௌபாக்யங்களை அடையப் பெற்ற காரணம் யாது? எனது பூர்வஜன்ம விருத்தாந்தம் என்ன ? என்னால் செய்யப்பட்ட பூர்வபுண்ய விசேஷங்கள் யாவை ? என்பதை விவரமாகத் தெரிவிக்க வேண்டுகிறேன் . ஏனெனில் , எனது பூர்வ ஜன்ம விருத்தாந்தத்தை அறிந்து இப்பிறவியிலும் தான் அவ்வாறே சத்கர்மாக்களை செய்து இனிவரும் பிறவியிலும் தங்களையே நாயகனாக அடையும் பாக்யத்தைப் பெறவேண்டுமென்ற காரணத்தைக்கூறி பகவானைப் ப்ரார்த்தித்தார்.
கண்ணபிரான், புன்சிரிப்புடன் சத்யபாமையின் கையை தனது கரத்தால் பற்றிக்கொண்டு மிக்க உல்லாசமாக நடந்து கொண்டு நந்தவனச் சோலையில் கற்பகவிருஷத்தின் அடியில் அமர்ந்து சத்யபாமையை நோக்கிச் சொல்லலானார்.
ஓ , பாமையே ! பூர்வத்தில் நாரத முனிவர் பிருது மஹாராஜாவிற்கு உரைத்த கார்த்தீக மஹாத்மியத்தில் நீ கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லப்பட்டிருக்கிறது . என்றாலும் உனக்காக இப்பொழுது மறுபடியும் விஸ்தாரமாகச் சொல்லுகிறேன் கேட்பாயாக என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் சத்யபாமையிடம் கார்த்திக மஹாத்மியத்தைச் சொல்லத் துவங்கினார் .
கேளாய் சத்யபாமா ! பூர்வம் கிருதயுகத்தின் முடிவில் ஹேமாத்ரி என்ற இமயமலைக்குச் சமீபத்திலுள்ள மாயாபுரி எனும் பட்டணத்தில் ஆத்ரேய கோத்ரத்தில் உதித்த தேவசர்மா என்ற ஓர் பிராஹ்மணர் சகல வேத சாஸ்திர சம்பன்னராய் தனது தர்மபத்னீசமேதராய் ப்ரதி தினமும் அதிதி பூஜை , ஒளபாசனம் , சூர்ய ஆராதனம் முதலிய சத்கர்மா அனுஷ்டானபரராகி மற்றொரு சூர்யனைப் போன்று விளங்கி வந்தார்.
அந்த ப்ராஹ்மணருக்கு /ஆண் சந்ததியின்றி குணவதி என்ற ஒரு மகள் இருந்தாள் . அவளுக்குச் சகல கலைகளையும் கற்பித்து விவாஹ வயது வந்ததும் தனது சிஷ்யர்களில் ஒருவனான சந்திரன் என்பவனுக்குத் தன் மகளான குணவதியைக் கன்யாதானம் செய்து கொடுத்து தனக்கு ஆண் சந்ததி இல்லாத காரணத்தால் தன் மருமகனான சந்திரனை புத்திரனாகவே பாவித்துத் தனது இல்லத்திலேயே வசிக்கச் செய்தார் . அந்த சந்திரனும் தனது மாமனாரான தேவசர்மாவை பிதாவாகவே நினைத்து அன்போடு தன் பத்னியான குணவதியுடன் வசித்து வந்தான்.
அவ்விதமாக வசித்து வரும் காலத்தில் ஓர் நாள் ஹோமத்திற்கு வேண்டியதான தர்ப்பை சமித்து முதலானவைகளைக் கொண்டு வருவதற்காக தேவசர்மாவும் சந்திரனும் புறப்பட்டு இமயமலைக்கு அடுத்துள்ள வனத்திற்குச் சென்று தங்களுக்குத் தேவையான ஹோமத் திரவியங்களை சேகரித்து எடுத்துக்கொண்டு அவ்வனத்தின் வனப்பைப் பார்த்து ரசித்து சந்தோஷமாகத் திரும்பி வரும் வழியில் கோர ரூபத்துடன் கூடிய ஒரு ராக்ஷஸன் எதிர்படவே அவ்விருவர்களும் மிக்க பயந்து ஓடவும் சக்தியற்றவர்களா யினர் . அவ்வரக்கனும் இவர்களைப் பிடித்து இம்சித்துக் கொன்றுவிட்டான் .
ஹே பாமா ! அவ்வாறு கொல்லப்பட்ட தேவசர்மாவும் சந்திரனும் சௌரமதத்தை அவலம்பித்து சூர்ய பகவானையே பூஜார்ச்சனை ஜப ஹோமாதிகளால் ஆராதித்து வந்தவர்களாக இருந்தாலும் உலகத்தில் சௌரம் , சைவம் , காணாபத்யம் , காபாலிகம் , வைஷ்ணவம் , சாக்தம் முதலிய ஆறு மதத்தினரும் நதிகளின் மூலமாக பாயும் எல்லா மழைத் தண்ணீரும் சமுத்ரத்தை அடைவதுபோல எனது திவ்ய வாசஸ்தலமான ஸ்ரீவைகுண்டத்தையே அடைந்தனர் என்றார் .
முதல் அத்யாயம் முற்றிற்று .
1 Comments
Nice start
ReplyDelete