21 வது அத்யாயம்
karthika puranam tamil Chapter 21 |
கேளாய், சத்யபாமா! இவ்வாறு விஷ்ணு கணங்கள் உரைத்ததைக் கேட்ட தருமதத்தன் மிகவும் ஆச்சரியத்துடன் கூடினவராய் மறுபடியும் அவ்விஷ்ணு கணங்களை நோக்கி ஓ தேவகணங்களே! சமஸ்தமான உலகங்களிலும் உள்ளவர்கள் யக்ஞம், தானம், விரதம், தபஸ், தீர்த்த ஸ்நானம் இவைகள் செய்வதால் ஏற்படும் பலனும், பக்தாளுடைய ஆர்வத்தை நிறைவேற்ற எவ்விதம் பகவானை ஆராதனை செய்வது? அவ்வாறு ஆராதனை செய்தவர்களுக்கு விஷ்ணுவானவர் எவ்விதம் சாந்நித்யத்தை அடையச் செய்வார்? மேலும் அவர்களுக்கு ஜனன மரணத்தினின்று எப்போது விமோசனம் ஏற்படும்? அவைகள் எல்லாம் எனக்கு தெளிவுரா எடுத்துரைக்க வேண்டுமென்று கேட்க, அதற்கு விஷ்ணுகணங்கள், பிராமணரே நீ கேட்ட கேள்விக்கு உபமானமாக ஒரு கதை சொல்லுகிறோம் கேட்பாயாக என்று விஷ்ணு கணங்களில் ஒருவராகிய புண்யசீலன் என்பவர் சொல்லத்தொடங்கினார்.
click here to view sri-godha-sthuthi-lyrics-in-tamil
கேளும் பிராமணரே! அதாவது காஞ்சீபுரி என்று ஒரு நகரம் இருந்தது. அந்நகரமோ தொண்டை மண்டலத்தின்கண் ஒரு திவ்ய புண்ணியஸ்தலம். அந்நகரமோ பதினெண்ணாயிரம் கோயிலைக் கொண்ட ஒரு பெரிய க்ஷேத்ரம். அங்கு கோயில் கொண்டிருக்கும் சிவபெருமான் திருவேகம்பனார் என்றும், அம்மையார் காமாட்சி தேவியென்றும் பெயர் பெறுவர். மேலும், அங்கு வரதராஜப்பெருமாள் கோயில் கொண்டிருக்கும் மஹா புனிதமான விஷ்ணுவாலயமும் உண்டு. அப்பேர்ப்பட்ட புண்ய ஸ்தலமாகிய அக்காஞ்சி மாநகரை, சோழ மகாராஜாவானவர் ப்ரதான ராஜதானியாக வைத்துக்கொண்டு அரசாண்டு வந்தார்.
அப்பேர்ப்பட்ட நகரத்தில் செல்வம், கல்வி, அறிவு, று ஒழுக்கங்களில் சிறந்தவர்களும் கொடையிற் சிறந்த பாரி போன்ற வள்ளல்களும் தோன்றி, செய்தர்க்கரிய பல அரும்பெருஞ் செயல்களை செய்துள்ளார்கள். அப்பேர்ப்பட்ட சோழ நாட்டிலே, அவ்வரசனானவன் தருமத்தில் மிக்க விருப்பம் கொண்டும், தேவ பக்தியில் மனம் செலுத்தியும், பகைவரை அடக்கி ஆள்வதில் மிகுந்த திறமை வாய்ந்த வீரனாக விளங்கியும் குடிகளிடம் ஆறிலொரு கடமை வாங்கியும், அந்நாட்டு பிரஜைகளையெல்லாம் தன்னுயிரைப் போல் பாவித்து வெகு நீதியுடன் அரசாண்டு வந்தான்.
குடிகளோவெனில் அவ்வரசனை தம் கண்முன் தோன்றிய தெய்வம் என்று பாவித்து அவனடி வணங்கி இன்புற்று வாழ்ந்திருந்தார்கள். அரசனும் அக்குடிகளின் பால் அன்புகூர்நது அவர்களுக்கு யாதொரு இடையூறும் நேராமல் தன் கண்ணிமைபோல் ரக்ஷித்து வந்தான்.
இப்படி இருக்கையில், ஒரு நாள் அரசனானவன் அனந்த பத்மனாபரை தரிசிக்க வேண்டி கோவிலுக்கு எழுந்தருளினார். அப்படி கோவிலுக்குள் சென்று சுவாமியைக் கண்டு தரிசித்து, பிறகு, அர்ச்சகரை அழைத்து மணிமுத்து வஜ்ர வைடூர்யம் முதலான நவரத்னங்களாலும், புஷ்பங்களாலும் அனந்த பத்மநாப ஸ்வாமியை சாஸ்த்ரரோக்தமாக சஹஸ்ர நாமார்ச்சனை செய்யச்சொல்ல, அர்ச்சகரும் அரசன் கட்டளையை ஏற்றுக்கொண்டு, ஸ்வாமிக்கு அர்ச்சனை செய்து தீபாராதனை காட்டியபின் சோழ ராஜனானவன் ஸ்வாமிக்கு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க பின் அர்ச்சகரால் கொடுக்கப்பெற்ற பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டு பகவானின் திவ்ய ரூபா அலங்காரத்தைக் கண்டு களித்திருக்கையில், அங்கு ஒரு பிராமணன் விஷ்ணு பூஜை செய்வதற்காக கமண்டலத்தில், தீர்த்தமும், துளசி பத்திர புஷ்பத்துடனும் வந்து ஸ்ரீஅனந்தபத்னமனாபரை வேண்டி விஷ்ணு சூக்தம் பாராயணம் செய்து, கமண்டலத்திலுள்ள தீர்த்தத்தை ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்வித்து துளசி புஷ்பத்தால் அஷ்டோத்ர நாமார்ச்சனை செய்து கற்பூர ஹாரத்தியைக் காட்டியபின் பகவானை அடிபணிந்தார். இப்படி இநத ப்ராமணர் செய்த துளசியின் அர்ச்சனையால், அரசனானவன் அர்ச்சனை செய்த நவரத்னங்கள் எல்லாம் துளசிபத்ர புஷ்பத்தால் மறைந்திருந்தன.
click here to view sree-meenakshi-anthathi
இவைகள் எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சோழ மன்னருக்கு கோபம் வந்து அப்பிராஹ்மணரைப் பார்த்து, ஒய், பிராமணரே! பகவானுக்கு ப்ரீதியாக என்னால் சமர்ப்பிக்கப்பட்ட நவரத்ன புஷ்பங்கள் எல்லாம் நீ அர்ச்சித்த துளசிபத்ர புஷ்பங்களால் மறைக்கச் செய்தாயே. என்னை நீர் யாரென்று அறியாது இவ்வாறு செய்தனை நானும் ஓர் விஷ்ணு பக்தனே. இருந்தாலும் நான் அரசன் என்பதை உணராது என்னை அவமதித்தீர். இப்பேர்ப்பட்ட மடத்தனம் செய்வது நீதியல்ல என்று கோபித்துக் கொண்ட வேந்தனை அந்த அந்தனர் பொறுமையுடன், அரசே! மன்னிக்கவும், நீர் செய்யும் மனோ பக்தி பூஜையை நீர் அறியமாட்டீர், ஆகையால்தான் தாம் என்மீது கோபித்துக் கொண்டீர்.
பகவானோ ஆதியும் அந்தமும் இல்லாதவர். அவர் எல்லோரிடத்திலும் கருணை கொண்டவர். உம்மிலும் எம்மிலும் அன்புடையவர். அவருக்கு அரசனென்றும் ஆண்டியென்றும் ஏதும் வித்தியாசம் இல்லை. நானோ நிஜபக்தியில் ஈடுபட்டு சதா அவருக்கு தொண்டு செய்து வருகிறேன்.நீர் அர்ச்சித்த நவரத்ன புஷ்பங்களாலும், நான் அர்ச்சனை செய்த துளசி புஷ்பங்களாலும் அவர் ப்ரீதியடையப் போவதில்லை. அஞ்ஞானமாகிய இருளைப் போக்கி ஞானமாகிய ஒளியில் நின்று ஏகமனதுடன் அவரை த்யானிப்பதே முக்திக்கு வழியாகும்.
அரசரே! கடவுள் பக்தி நிலை இன்னதென்பது அறியாது பேசிவிட்டடீர். இருந்தாலும் தாங்கள் எவ்வளவு காலமிருந்து பகவானை ஆராதித்து வருகிறீர்? எனக்கேட்க, அதற்கு அரசனும், அந்தணரே! நன்றாய் கேட்டீர். வீண் கர்வம் கொண்டு பிதற்றாதீர். அதமனாகிய உனக்கு அவ்வளவு பக்தி ஏற்பட்டிருந்தால் அந்த பகவானுக்கு ப்ரீதியான யக்ஞமோ, தானமோ, தேவாலயமோ உன்னால் செய்யப்பட்டு இருக்கிறதா? இல்லை. அப்படி சக்தியில்லாத உனக்கு பக்தி என்னும் அஹங்காரம் ஏற்படக் காரணம் என்ன? இதை எல்லாம் நன்றாக ஆலோசித்து இதோ இந்த ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் ப்ராஹ்மணர்களுக்குமுன் தெரியப்படுத்தும் எனக் கேட்க, அதற்கு விஷ்ணுதாஸர், அரசே! இவ்விஷயம் நீரும் நானும் விவாதித்துக் கொள்வதில் பயனில்லை. நிஜ பக்தியுள்ள வர்களின் பக்தி நிலை பகவானே வந்து நிரூபிப்பார். இவை எல்லாம் இங்கு வந்திருக்கும் மஹா ஜனங்களும் அறியட்டும் என்று சொல்லி காத்து, அவரவர்கள் இருப்பிடம் சேர்ந்தார்கள்.
அரசனும் அரண்மனையை அடைந்து கோவிலில் நடந்த சம்பவத்தைக் கேட்டு மனஞ்சகியாது இரவில் நித்திரை இல்லாமலும் சிந்தித்து கொண்டிருக்கையில், திடீரென ஒரு ஜோதி தோன்றி அரசரே! ஏன் கவலை கொண்டிருக்கிறாய்? இன்று கோவிலில் உம்முடன் வாதம் செய்த பிராமணன் என் நிஜபக்தனே. அவனை இன்னாரென்று அறியாது நீ அவரை நிந்தித்துப் பேசிவிட்டாய் என்று சொல்லி ஜோதி மறையவே, அரசன் அடங்கவொணாத துக்கம் அடைந்தவராய், அந்த
பிராமணரை மறுநாள் வரவழைத்து தான் செய்த அபசாரத்தை பொறுத்துக் கொள்ளும்படி வேண்டிக்கொண்டார். அதற்கு பிராமணர், அரசே! நீர் செய்த அபசாரத்தை யான் பொறுத்துக் கொள்ள அவ்வளவு அருகனல்ல. பகவானே இதை பொறுத்து உம்மை ரக்ஷிப்பார். இனிமேல் நீர் பகவானையே சேவித்துக் கொண்டிரும் என்று சொல்லி விடைபெற்றுச் சென்றுவிட்டார்.
பிறகு அரசன் மனம் தெளிவடைந்து விஷ்ணு சம்மந்தமான யாகங்களைச் செய்யத் தொடங்கி அந்த யாகத்திற்கு வேண்டிய சாம கிரியைகளை சேகரிக்கும்படி மந்திரியை பார்த்துக் கட்டளையிட்டார். அரசர் உத்திரவின்படி யாகத்திற்கு வேண்டிய பொருள்களும் யாகசாலையும் ஏற்படுத்தி அரசருக்கு அறிவிக்க, அரசன் மஹா சந்தோஷமடைந்தவராய் யாகசாலையை அடைந்து, தனது குலகுருவாகிய மௌத்கல்யரை வரவழைத்து அஷ்டருத்விக்களையும் நியமித்து யாகத்தை சம்பூர்த்தி செய்து அநேகதானதருமங்களைச் செய்து கொண்டிருக்கிறார்.
இப்படியிருக்க, ஆலயத்தில் விஷ்ணுதாசரானவர் பஞ்ச நியமங்களை செய்துகொண்டு பக்திப் பூர்வமாகப் பூஜித்தும், துளசி பரிபாலனத்தையும், ஏகாதசி விரதமும், த்வாதசி ஆச்சார ஜபமும், பாப நிவர்த்தியான விரதமும், ந்ருத்யகீத வாத்யமும், கோஷித்து ஷோடஸோபசார பூஜை செய்தும், அந்த பிராமணர் உண்ணும் போதும், உறங்கும்போதும், நடக்கும் போதும் சதா சர்வ வியாபகராய் இருக்கின்ற விஷ்ணுவை மனதில் ஸ்மரித்துக் கொண்டு பகவானை சந்தோஷிக்கச் செய்தார். இங்ஙனம் இப்படியிருக்க, அரண்மனையில் அரசன் செய்யும் யாகாதி தான தருமங்கள் நியதி தவறாமல் நிறைவேற்றி சமஸ்த இந்த்ரிய கர்ம பலத்தை அடைந்தவர் ஆனார். தவிர, விஷ்ணுதாசரானவர் விஷ்ணுகோவில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டார்.
1 Comments
Send karthikai puranam 25th day
ReplyDelete