24வது அத்யாயம்

    இவ்வாறு, கலகியானவள் நற்கதியடைந்த சவிஸ்தாரத்தைக் கேட்ட பாமையானவள், மனம் புளகாங்கிதம் (உள்ளம் பூரித்தவளாய்) அடைந்தவளாய் பகவானைப் பார்த்து, ஸ்வாமி! இன்னொன்று கேட்க விரும்புகிறேன். அதாவது, சிம்ஹாத்திரி மலையின் சமீபத்தில் ஒடும் கிருஷ்ணவேணி நதியின் ப்ரபாவத்தையும் அந்த க்ஷேத்ரத்தின் மகிமையையும் கொஞ்சம் உரைத்தருள வேண்டும் என்று வேண்டிக் கொள்ள, பகவானான பரமாத்மா, சதீ! இச் சவிஸ்தாரத்தை நாரதர் பிருதுவிடம் உரைத்ததை நானும் கேட்டிருக்கிறேன். உனக்கும் தெரிவிக்கிறேன் கேள். தவிர, அப்புண்ய க்ஷேத்ரத்தின் ப்ரதாபத்தை எடுத்துரைக்க எவராலும் இயலாது. ஆகையால்,நான்கிஞ்சித்து (கொஞ்சம் போல்) எடுத்துரைக்கிறேன். 

    அதாவது, முன் காலத்தில் சாக்ஷன் என்கிற மனுவிற்கு அனுகூலமாக பிரம்மாவானவர் யாகம் செய்யவேண்டி. சிம்ஹாத்ரி பர்வதத்தின் பூர்வ பாகத்தில் யாகசாலையை நிர்மாணித்து, யாகத்திற்கு வேண்டிய ஸாமக்கிரியைகளுடன் ஹரிஹர ப்ரம்மன் சமஸ்த தேவர்களுடன் கூடி, அந்த சிம்ஹாத்ரிகிரியை (மலையை) அடைந்தார். அங்கு பிருகு முதலான முனிஸ்ரேஷ்டர்கள் அமர்ந்திருந்தார்கள். அப்படியிருக்க, யாக ஆரம்பம் நெருங்கவே, யாகதீக்ஷை கொடுப்பதற்காக சகல தேவர்களும் முனிவர்களும் ஏகோபித்து, ப்ரம்ம தேவருக்கே யாகதீக்ஷை கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் செய்தார்கள். அதன்படியே பிருகுவானவர்ப்ரஹ்மதேவரை நோக்கி, ஹே சதுர்முகா இந்த யாகத்திற்கு தமக்கே யாகதீக்ஷை கொடுப்பதற்காக சகல தேவர்களும் ருஷீஸ்வரர்களும் நியமித்து இருக்கிறார்கள். ஆகையால், நீர் தங்கள் தேவியாருடன் பீடத்தில் அமர்ந்து யாகதீக்ஷை பெற்றுக்கொண்டு, சம்பிரமமாக யாகத்தை நிறைவேற்ற வேண்டும் என, ப்ரம்ம தேவரானவர் அதற்கு இணங்கி சரஸ்வதி தேவியாரை வரவழைத்தும் இன்னமும் வருவதாக இல்லை. காலமோ அதிக்கிரமிக்கிறது. இதற்கு உபாயம் என்ன என்று கேட்க, பகவானானவர் ப்ரம்மரையும் பிருகு மஹருஷியையும் பார்த்து, முனிவரே! சரஸ்வதி தேவி வர தடைபடுகிற காரணம் தெரியவில்லை. யாகாரம்ப காலம் நெருங்கிவிடடது. இனி தாமதம் செய்யக்கூடாது. இதோ காயத்ரி தேவி இருக்கிறாள். இவளும் ப்ரம்ம தேவருடைய புண்ய வசத்தினாலே பாரியையாக அடைந்தவள். ஆகையால், இவளை வைத்து யாகத்தை முடிக்க வேண்டியதுதான் என்று தீர்மானித்து பரமேஸ்வரரும், மஹாவிஷ்ணுவும் பிருகு மஹருஷியும் ஏகோபித்து சம்மதித்து, பிறகு பிருகு முனிவர் காயத்ரீ தேவியாரை அழைத்து ப்ரம்ம தேவருடைய தக்ஷிண பார்சுவ பாகத்திலே அமர்த்தி யாகதீக்ஷை அளிக்க, ப்ரம்மாவும் காய்த்ரியும் அந்த யாகதீக்ஷையை பெற்றுக்கொண்டு யாகத்தை ஆரம்பித்தார்கள்.

ALSO READ:Hanuman Sahasranamam

    அந்த சமயத்தில் வாணியானவள் யாகசாலையை அடைந்து, காயத்ரியுடன் ப்ரம்ம தேவரானவர் யாக தீக்ஷையை வகித்து, யாகம் நடத்திக் கொண்டிருப்பதைக் கண்டு பொறாமை மேலிட்டவளாக, மகா கோபத்துடன் அங்குள்ள தேவர்களையும் பிருகு முதலான முனிபுங்கவர்களையும் நோக்கி, தேவர்களே! ரிஷி ஈஸ்வரர்களே! ப்ரம்ம தேவருக்கு தர்ம பத்னியாக விளங்கும் பூஜ்யாளாகிய என்னைத் தவிர்த்து அபூஜ்யாளாகிய காயத்ரியை வைத்துக்கொண்டு எவ்வாறு யாகம் ஆரம்பம் செய்தீர்கள்? இது தவறு. சொந்த தர்மபத்னியை விட்டு மாற்றாளை வைத்துக் கொண்டு யாகம் நடத்தலாம் என்று எந்த தர்ம சாஸ்த்ரத்தில் கூறப்பட்டு இருக்கிறது? இது அதர்மம், அநீதி, இதனால் இந்த யாகம் நடந்த இடத்தில் துர்பிக்ஷம். பயம், மரணம் இம்மூன்றும் ஏற்படட்டும். நான் உட்காரும் பீடத்தில் இநத் காயத்ரியை யார் உட்கார நியமித்தார்களோ, அவர்கள் ஜலஸ்வரூபமாகவும் அதாவது சதா ஜலம் ஓடிக்கொண்டிருக்கும் நதியாகவும், தவிர காயத்ரியானவர் எனக்குச் சமதையாய் இருக்கிற பீடத்தில் அமர்ந்ததினால், சர்வ காலமும் உலகத்தில் எல்லோராலும் கொண்டாடப்படும் பெரிய நதியாகவும் ஆகக்கடவது என்று சாபம் கொடுத்தாள்.

    இதைக்கேட்ட காயத்ரி தேவியானவள், இந்த்ராதி தேவர்களாலும் பிருகு முதலிய ருஷீஸ்வரர்களாலும் தகிக்கப்பட்ட மனதுடையவளாய் சரஸ்வதியை நோக்கி, ஹே பாரதி! அப்படி நான் நதியாய் அடைவேனாகில், நீயும் ஒரு நதியாக ஓடக்கடவது என்று பிரதிசாபம் கொடுக்க, அங்குள்ள விஷ்ணு முதலான சமஸ்த தேவர்களும் ஹூங்காரத்தை பண்ணினவர்களாய், சாஷ்டாங்கமாக சரஸ்வதி தேவியாரை வணங்கி. ஹே கலைவாணி! சமஸ்த தேவர்களும் தங்களால் சபிக்கப்பட்டோம். இப்போது நாங்கள் ஜலரூபத்துடன் நதியாகி விடுவோம். பிறகு மூவுலகமும் நசிந்துவிடும். ஆகையால், இந்த சாபத்தை மாற்றிவிடும் என்று பிரார்த்திக்க, அதற்கு சரஸ்வதியானவள், தேவர்களே! நான் கொடுத்த சாபம் மீளாது. மேலும், ஒரு யாகமோ யக்ஞமோ செய்வதென்றால், முதலில் மூலப் பொருளாகிய விக்னேஸ்வரரை பூஜிக்க வேண்டும். இங்கு அதுவும் செய்யவில்லை. அதனால்தான் தாங்கள் செய்த யாகத்தில் விக்னம் ஏற்படக்காரணம் உண்டாயிற்று.

Also Read MARGABHANDHU STROTHIRAM

    ஆகையால், நீங்கள் உங்கள் அம்சங்களால் நதியாகப்பெருகி ஓடுங்கள். நாங்களிருவரும் (காயத்ரியும்,சரஸ்வதியும்) எங்கள் அம்சங்களால் நதியாகி மேற்கு முகமாகச் செல்கிறோம் என்று சொல்ல, ப்ரம்மா, விஷ்ணு, சிவன் முதலானோர் தங்கள் தங்கள் அம்சங்களால் ஜல பூதமாயிருக்கும் நாமத்துடனும், பரமேஸ்வரர் வேணியாகவும், பிரம்மானவர் கூர்மதி என்னும் பெயர் பெற்று நதி ரூபமாக விளங்கினார்கள்.

    இவ்வாறு தேவர்கள் தங்கள் தங்கள் அம்சங்களால், சஹ்ப பர்வதத்தின் அடியிலிருந்து நதியாகப் பெருகி ஓடினார்கள். காயத்ரியும் சரஸ்வதியும் மேற்கே நோக்கிச் செல்லும் நதி ரூபம் பெற்றார்கள். இவைகள் எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஹரி ஹராளன மஹாபலி, ஜாபாலி மற்றும் பிருகு முதலிய ரிஷிகளும் கிருஷ்ணை, வேணி. கூர்மதி நதிகளின் மாகாத்மியத்தை அறிந்து அந்தர்த்யானமானார்கள். ஆகையால் இந்த கிருஷ்ணை, வேணி, கூர்மதி ஆகிய மூன்று நதிகளின் உத்பவத்தை எவனொருவன் கேட்கிறானோ அல்லது வாசிக்கிறானோ, அவன் பிரம்மஹத்தி தோஷங்களில் இருந்து விடுபட்டு ஜீவன் முக்தன் ஆவான் என்று பகவான் பாமையிடம் தெரிவித்தார்.

24வது அத்தியாயம் முற்றிற்று.